வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

Latestnews: "என்னைத் தாலாட்ட வருவாளா" பாடகி நோயால் மரணம்!



tamil news: இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் நேற்றைய தினம் (25.01.2024) காலமானார்.


நீண்டகாலமாக பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையின் தலைநகரான கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு நேற்றைய தினம் வந்திருந்தார். 


பித்தப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக பிறிதொரு ஊடகத்திற்கு பேசிய திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


25.01.2024 மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை இன்று தமிழ்நாடு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.


பவதாரிணி, பிரபுதேவா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் "மஸ்தானா மஸ்தானா" பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.

இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் "மயில் போலப் பொண்ணு ஒன்னு..." என்ற பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

மேலும், ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார்.

எம்.குமரன் படத்தில் வரும் "அய்யோ அய்யோ" பாடல், தாமிரபரணி படத்தின் "தாலியே தேவையில்ல பாடல்..." போன்ற சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

அதேபோல, காதலுக்கு மரியாதை படத்தில் வரும் "என்னைத் தாலாட்ட வருவாளா...", ஆயுத எழுத்து படத்தின் "யாக்கைத் திரி...", காக்க காக்க படத்தின் "என்னைக் கொஞ்சம் மாற்றி..." போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளமை குறி்ப்பிடத்தக்கது. 

இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான 'மித்ர் மை பிரெண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.

1991ம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமணமாலை என்ற இசைத் தொகுப்பில் ஆராவமுதே என்ற பாடலை பவதாரிணி பாடினார்.

அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். 



பவதாரிணி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


இந்நிலையி்ல் மறைந்த பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்து பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில்,

"எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தைரியத்துடன் இருக்க நான் வேண்டிக்கொள்கின்றேன். இது மிகவும் மனதை உடைக்கும் செய்தி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.



"பதவாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். 

இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. 

அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறாக தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா.


"பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது" என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.


இவர்களைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பின்னணிப் பாடகி பவதாரிணியின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று எல்.முருகன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.


பவதாரிணியின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.


"இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். 

கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் "இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறி்ப்பிடத்தக்கது. 



"இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட 'இலக்கணம்' என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர்.

அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.