மதுவிற்காக நாளொன்றுக்கு 690 மில்லியன்! செலவிடும் இலங்கை
tamil news: இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல்மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருதயநோய், புற்றுநோய் மற்றும் சுவாசநோய்கள் போன்ற தொற்றாதநோய்கள் ஏற்படுவதற்கு 83% மது, புகையிலை பாவனை காரணமாகவிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில்,
மதுவினால் இலங்கைக்கு 165.2 பில்லியன் வருமானம் கிடைத்தபோதிலும் 237 பில்லியன் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மது பாவனையால் நாளொன்றுக்கு 40–50 பேர் வரை உயிரிழப்பதாகவும் இந்த தொகை வருடத்திற்கு 15,000–20,000 எனவும் கூறப்படுகின்றது.
இதனால் இலங்கையில் பல குழந்தைகள் தந்தையை இழந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஒன்றுகூடும் இடங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபாவனை அதிகரித்திருப்பதால் சமூகக் குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு இலங்கையர்கள் நாளொன்றுக்கு 510 மில்லியன் ரூபாய்களை மதுபாவனைக்காக செலவழித்துவந்ததாகவும், இந்த தொகை தற்போது அதிகரித்திருப்பதாகவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல்மையத்தின் நிர்வாக இயக்குனர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
மேலும் 2019ம் ஆண்டு புகையிலை வரி 92.9 பில்லியனாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.