ஊர்காவற்றுறை, சாவகச்சேரி வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிக்க திட்டம்!
tamil news:
"எதிர்காலத்தில் ஊர்காவற்றுறை, சாவகச்சேரி வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதனூடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை குறைக்கமுடியும்."
இவ்வாறு யாழ் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையின் பல்வேறு நிதிமூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச்செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு நேற்றையதினம்(30.01.2025) திறந்துவைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே யாழ் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வடமாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது.
தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் ஊர்காவற்றுறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதனூடாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும்.
அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும்.
மேலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திறந்துவைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும்.
முக்கியமாக கடந்த டிசெம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள தாதியர்கள், மருத்துவர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச்சுகாதார துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர்
இதுதொடர்பில் மத்தியசுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மிகச்சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது.
இது உங்களின் அர்ப்பணிப்பானசேவைக்கு கிடைத்த வெற்றி."
என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்கள் குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.