"அர்ச்சுனா எம்.பிக்கு தலையில பிரச்சினை" சபையில் கடும் குழப்பம்!
tamil news: நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று(06.02.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து நாடாளுமன்றில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த 29ம் திகதி அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்டவகையிலேயே என்னை போக்குவரத்து காவற்துறையினர் மறித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக வந்துகொண்டிருந்தபோதே இவ்வாறு காவற்துறை மறித்து விசாரணை நடத்தினர்.
"எனது வாகனத்தில் விஐபி விளக்குகள் போடப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர்கள் என்னை மறித்தார்கள்."
என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உரையை இடைநிறுத்திய சபாநாயகர்
"நீங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தீர்கள் எனவே தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள்."
என அறிவித்த பின்னர் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய அர்ச்சுனா,
தன்னை அநுராதபுரம் பகுதியில் வைத்து காவற்துறையினர் மறித்ததாகவும், தனது அடையாள அட்டையை கேட்டதாகவும்,
தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் என்னுடைய அடையாள அட்டை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,
நாடாளுமன்றத்தால் தரப்பட்ட தற்காலிக அட்டை என்னிடம் உள்ளது என்று அதனைக் காட்டமுற்பட்டும் அந்த போக்குவரத்து காவற்துறையினர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக கூறினார்.
இதனையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் அர்ச்சுனா எம்.பியைப் பார்த்து,
"உங்களுடைய அடையாளஅட்டை நாடாளுமன்ற அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.
அதனை நீங்கள்தான் பெற்றுக்கொள்ள தவறியுள்ளீர்கள்."
என சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா,
தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர் தனக்கும் காவற்துறையினருக்கும் இடையில் நடந்த உரையாடலை காவற்துறையினர் பதிவுசெய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும் காவற்துறையின் இந்த செயல் வெட்கப்படவேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு காவற்துறை பதிவுசெய்து ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறினார்.
இந்த நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இதுதொடர்பில் வெட்கப்பட வேண்டும் என்றும் சபையில் மீண்டும் மீண்டும் சத்தமாக தெரிவித்தார்.
இதன்போது இடையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
"ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது, சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை."
என்று கடும் தொனியில் பேசினார்.
அத்துடன்
"நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை."
என்றும் தயாசிறி சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து உரையாற்றிய சபாநாயகர்,
"நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும்.
இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன் அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய தகாத வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும்."
என்றும் அறிவித்தார்.
எவ்வாறாயினும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
"இந்த உரைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதால் பயனில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிரபல யூடியூபர், அவர் உரையாற்றும் இந்த நேரத்திலேயே அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டிருக்கும்."
என்றும் குறிப்பிட்டார்.