மகிந்தவின் அரசியல் வாரிசுக்கு அழைப்பாணை!
tamil news: ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து சுமார் 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
சட்ட மாஅதிபரால் தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த அழைப்பாணையை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்சவுக்கு எதிரான சட்ட மாஅதிபரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறை நிதிமோசடி விசாரணை பிரிவு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது.
அந்த வழக்கில் நாமல் ராஜபக்ச ஒரு சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.