யாழ்.செம்மணியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு – பதற்றம் ஏற்படுத்தும் நிலை
tamil news:
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கவலை மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது செம்மணி அருகே உள்ள 'சித்துப்பாத்தி' இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,
நேற்றையதினம்(13.02.2025) வியாழக்கிழமை அத்திவாரம் வெட்டும் போதே மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விடயம் கட்டடப்பணிகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர் மூலம் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்திச் சங்கத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டநிலையில்,
கட்டடப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
குறிப்பாக 1996ம் ஆண்டு சுண்டுக்குளி பாடசாலை மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட நால்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் 1995-96ம் ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு,
செம்மணி பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள்,
தற்போது எலும்புக்கூட்டுகள் கண்டெடுக்கப்பட்ட மயானத்திற்கு அண்மையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


