துப்பாக்கி கொண்டு துபாய் போன கான்ஸ்டபிள் - பெற்றோரை தூக்கிய காவற்துறை!!!
tamil news: கடந்த சனிக்கிழமை(08.02.2025) அன்று கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் துபாய்க்கு தப்பியோடிய நிலையில் அவருடைய பெற்றோரை காவற்துறை கைதுசெய்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடமையில் இருந்தபோது காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் துபாய்க்கு தப்பிச்சென்ற சம்பவமொன்று கல்கிஸை காவற்துறை நிலையத்தில் பதிவாகியுள்ளது.
அதாவது கல்கிஸை காவற்துறை நிலையத்தில் பணியாற்றிய காவற்துறை கான்ஸ்டபிள் ஜே.ஏ.கே.ஏ. ஜெயக்கொடி என்பவர் கடந்த சனிக்கிழமை(08.02.2025) அன்று கஹவிட்ட மாவத்தைக்கு அருகிலுள்ள வீதிச்சோதனையில் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
மாலை 6 மணி முதல் மறுநாள்(09.02.2025) காலை 6 மணி வரை வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கவேண்டிய கான்ஸ்டபிள்,
ஆயுதக்களஞ்சியசாலையில் 28045840 என்ற எண் கொண்ட T-56 ரக துப்பாக்கியுடன், 30 தோட்டாக்களையும் எடுத்துக்கொண்டு காவற்துறை நிலையத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.
ஆனால் கான்ஸ்டபிள் வீதிச்சோதனை நடவடிக்கைக்காக பணிக்கு சமூகமளிக்காததால்,
காவற்துறை அவரது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தபோதிலும் அவர் பதிலளிக்கவில்லை.
குறித்த கான்ஸ்டபிள் காவற்துறை நிலையத்தை விட்டு வெளியேறும்போது குறிப்புகள் அல்லது பணியிலிருந்த அதிகாரிக்கு தகவல் வழங்கவில்லை.
இதனையடுத்து நடத்த விசாரணைகளில்,
சந்தேக நபர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து துபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரால் எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் பணத்திற்கு விற்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சந்தேகநபருக்கு வெளிநாட்டில் இருக்கும் படோவிட்ட அசங்க என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் உட்பட பல பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளது.
அனுராதபுரம், பேமடுவ, கஹலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கும் அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரது தாயும் தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
