கைது ஆணை பிறப்பிக்கப்பட்டநிலையில் முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் காணாமல் போனார்!
tamil news:
முன்னாள் காவற்துறை மாஅதிபர்(IGP) தேசபந்து தென்னகோன் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தறை நீதிமன்றம் அவரது கைதுக்காக ஆணை பிறப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வாடகல தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில்,
சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி. சாமிந்த விஜேசிறி, முன்னாள் ஐஜிபியின் கைதுக்கான நிலைமையை கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் வாடகல, காவற்துறையினர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
நேற்றையதினம்(28.02.2025) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,
சட்டத்துறைக்கு தேவைப்பட்ட முக்கிய நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரி இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிவித்தார்.
அவர் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அது தேசபந்து தென்னகோனை குறிக்கக்கூடும் என பரவலாக நம்பப்படுகிறது.
மேலும், அவர் விரைவில் சரணடைவார் என்ற நம்பிக்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பர் 31 ஆம் தேதி வெலிகமவில் உள்ள W15 ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாக,
மொத்தம் 9 காவற்துறை அதிகாரிகளை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு காவற்துறை அதிகாரி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்தார்.
குற்றப்புலனாய்வுத்துறை(CID) முன்னாள் ஐஜிபியை கைதுசெய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பவம் நடந்த நாளில் கொழும்பு குற்றப்பிரிவின்(CCD) அதிகாரிகள் வெலிகமவில் அனுப்பப்பட்டது அனுமதியற்றதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தற்போது முன்னாள் ஐஜிபியை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
