உலக வல்லரசுகளை திசை மாற்றும் அரிய பூகோள மூலகங்கள்!
"Critical minerals are vital for a host of
industries really partnering with world, in terms of rare we very much need
Motherland"
நாம் பயன்படுத்தக்கூடிய கையடக்கதொலைபேசியோ அல்லது மடிக்கணினியோ மட்டுமன்றி நாம் தினமும் பார்க்கின்ற நவீன தொலைக்காட்சியாக இருந்தாலும், ஏன் மின்சார வாகனத் தொழினுட்பத்திலிருந்து போர்விமானங்கள் உட்பட ஆயுத பாதுகாப்பு வரை எல்லாவற்றிற்குமே தேவையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமானது தான் 'அரிய மூலகங்கள்(Rare Earth Elements)'.
இந்த அரிய மூலகங்கள்(Rare Earth Elements) என்ற சொல்லுக்கு இன்றுவரை முடிசூடா சக்கரவர்த்தியாக இருப்பது சீனாதான்.
இப்போது, இந்த முடியாட்சிக்கு முடிவுகட்ட உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா புதிய மந்திர சாவியை கண்டுபிடித்துவிட்டார்கள். அரிய மூலகங்களின்(Rare Earth Element) ஒட்டுமொத்தமான உலக சந்தைவாய்ப்பையும் 'நான்தான் கட்டுப்படுத்துவேன்(I am the Supreme of the rare earth elements)' என்ற நினைப்பில் இருந்த ரஷ்யாவிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வருகை அல்வாத்துண்டு போலாகிவிட்டது. அது 'டொனால்ட் ட்ரம்பையும் சேர்த்துக்கொண்டு நாங்கள் செயற்படவிருக்கின்றோம்' என்ற முடிவை புட்டின் அறிவிக்கும் கட்டத்திற்கு வந்திருக்கின்றது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி - ட்ரம்ப் கருத்துமோதலுக்கு பிறகான உலக ஒழுங்கை பார்க்கலாம்.
மேற்குலக பின்னணி
இப்படி ஒரு உலக ஒழுங்கை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள், கொள்கை அளவிலேயே எதிரிகளாக இருந்துவந்த ரஷ்யாவும் அமெரிக்காவும் இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு பேரும் சேர்ந்து "ஒரு புதிய உலகத்திற்கான வழியை நாங்கள் காட்டப்போகின்றோம். இந்த புதிய உலகத்தில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பலவிதமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு நிறைய விடயங்களை செய்யப்போகின்றோம்" என்று சொல்கின்ற அந்த உலக ஒழுங்கை நினைத்துப்பார்க்கமுடியுமா? அப்படி ஒரு ஒழுங்குதான் சமீப காலமாக இடம்பெற்றுவருகின்றது.
2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய மாற்றமாக இந்த மாற்றத்தை நாங்கள் பார்க்கும்போது, தூரத்தில் சீனா கொஞ்சங்கொஞ்சமாக ஓரங்கட்டப்படுவதும் மேற்குலக நாடுகளை அமெரிக்கா வெறுப்பதும் ஒட்டுமொத்தமாக மேற்குலக நாடுகள் சேர்ந்து புதிய ஒரு ராணுவத்தை உருவாக்குவதும் 'நேட்டோ(NATO)' இராணுவ கூட்டமைப்பு கலைந்துபோவதற்கான வாய்ப்புகளும் எனது கண்களில் தென்படுவதை தவிர்க்கமுடியவில்லை.
'கிரிட்டிகல் ஃபார் லேட்டஸ்ட் டெக்னாலஜி(Critical for latest technology)' என்று சொல்லக்கூடிய ஒரு 17 மூலகங்களை வைத்து உலக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் வந்து கொண்டிருக்கின்றது. 'அரிய பூகோள மூலகங்கள்(Rare Earth Elements)' என்று சொல்லப்படும் இந்த 17 மூலகங்கள் உலகளாவிய ரீதியில் 100Kg என்று எடுத்தால் அதில் 70Kg சீனாவிடமிருந்துதான் வருகின்றது. அதுமட்டுமின்றி இந்த மூலகங்களை பிரித்தெடுக்கும் தொழினுட்பத்தில்(Process of earth elements) அதிக இடம் வகிப்பதும் சீனா தான். அதாவது உலக அளவில் அரிய உலோகங்களில் 100Kg இனை பிரித்தெடுக்கின்றோம் என்றால் அதில் 90% பகுதி சீனாவின் தொழினுட்பத்தில்தான் பிரித்தெடுக்கப்படுகின்றது. அப்படி பார்க்கப்போனால் அரிய மூலகங்களின் இருப்பில் 70% சீன நாட்டுக்குள்ளேயே இருக்கின்றது; பிரித்தெடுக்கும் தொழினுட்பத்திலும் 90% சீனாவின் தொழினுட்பம் தான் என்ற வகையில் 'அரிய பூகோள மூலகங்களின் முடிசூடா மன்னன் சீனா' என்று நான் கூறியது மிகையல்ல.சமீப காலங்களில் சீனா இந்த அரிய மூலகங்களை கனிமவளமாக பிற நாடுகளுக்கு கொடுப்பதை குறைத்துவிட்டது.
இதிலிருந்து தான்
அமெரிக்காவுக்கு தலைவலி ஆரம்பித்தது. ஏனென்றால் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்ததுபோல
அமெரிக்காவின் ஆயுத மற்றும் பாதுகாப்புத்துறை வளர்ச்சிக்கு இந்த 17 மூலகங்கள் இன்றியமையாதவை.
இதை நன்கு அறிந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் "சீனாவுக்கு எதிராக நாங்கள்
10% வரியை உயர்த்தப்போகிறோம்." என்று அறிவித்தார். டொனால்ட் டிரம்ப் வந்த பிறகு
சீனாவுடனான உறவு கண்டிப்பாக பெரிய அளவில் சிக்கலாகும் என்று உலக வல்லுனர்கள் கூறியிருந்த
நிலையில் தான் இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய சீனா ‘எங்களுடைய
நாட்டிலிருந்து அரிய மூலகங்களின் கனிமவள ஏற்றுமதியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை
தடைசெய்கின்றோம். அரிய மூலகங்களை பிரித்தெடுக்கும் தொழினுட்பத்தையுமே சில நாடுகளுக்கு
மட்டும் பகிர்ந்துகொடுப்போம்.’ என்னும் முடிவை அறிவிக்கின்றனர். இதை அறிந்த அமெரிக்கா
கதிகலங்கியது. ஏனென்றால் அமெரிக்காவின் ஆயுதவளர்ச்சி சீனாவின் நட்பு நாடுகளிடம் தேங்கிவிடுமல்லவா.
வெள்ளை மாளிகை சம்பவம்
இந்த சமயத்தில் உக்ரைன் நாட்டில் கணிசமான அளவில் அரியமூலகங்கள் இருக்கின்றன என்பது அமெரிக்காவிற்கு ஞாபகம்வரவே, 'உக்ரைனை கைக்குள் போட்டுக்கொண்டால் கண்டிப்பாக சீனாவை நம்பி நாம் இருக்க அவசியமில்லை. நமது போர்விமானம் தொடங்கி ரேடார் வரை எல்லாத்தையும் நாமே உருவாக்கணும் என்றால் அரியமூலகங்கள் வேண்டும். உக்ரைனை நமது கைப்பாவையாக்கி ரஷ்யா - உக்ரைன் போருக்கான அமைதி பேச்சுவார்த்தையை நடத்துவோம். அந்த அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைனின் அந்த கனிமவளங்களின் 50% லாபத்தையும், 50% பிரித்தெடுக்கும் வேலையும் எங்களுக்குதான் என்று அதை ப்ராசஸ் பண்ணுவோம்' என்னும் திட்டத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சொல்கின்றார்கள்.
ஆனால் செலன்ஸ்கி பல உலக நாடுகளிடம் கண்ணைமூடிக்கொண்டு ஆயுதங்களையும், பணத்தையும் வாங்கிகுவித்ததே இந்த அரிய உலோகங்களை பயன்படுத்தி சுலபமாக கடனை அடைத்துவிடலாம் என்னும் எண்ணத்தில் தான். இதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்துபோடச்சொன்னதும் "அமெரிக்காவிடம் நாங்கள் வாங்கினதே வெறும் 100 பில்லியன் அமெரிக்க டாலர் தான். நீங்கள் சொல்வதுபோல ஏறத்தாழ 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நாங்கள் எப்படி இந்த கனிமவளத்தை கொடுக்கமுடியும். இதெல்லாம் சரியில்லை" என்று கூறிவிட்டார். "அப்படியென்றால் இந்த வியாபாரம் எனக்கு சரிவராது. நீ போய்வா" என்று சொல்லி உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களை விரட்டிவிடுகின்றார்கள். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற காரசார கருத்துமோதல் உலக அமைதிக்கானது இல்லை உள்ளூர இருக்கும் பயத்திற்கு என்பது புரிகின்றது. தொடர்ந்து "இதுநாள் வரையிலும் செய்த உதவிகள் அனைத்திற்கும் பெரிய நன்றி" என்று கூறிவிட்டு செலன்ஸ்கி அவர்கள் வந்துவிட்டார்.
இதனையடுத்து
நேற்றுமுன்தினம்(01.03.2025) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்கள் ஒரு அறிவிப்பை
கொடுக்கின்றார் "அரிய பூகோள மூலகங்கள் உக்ரைனை விட கூடுதலாக எங்களிடம் இருக்கின்றது.
நாங்களும் அமெரிக்காவும் சேர்ந்து இந்த அரிய மூலகங்களை எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட
வாய்ப்புகள் உண்டு" என்று. உலக அரசியலில் வீசப்பட்ட அணுகுண்டு ஏன்றால் அது இதுதான்.
இரண்டு நாடுகள் கனிமவளத்துக்காக சேர்வது ஒன்றும் புதிது கிடையாது. ஆனால் கொள்கையளவிலேயே
எதிரிகளான ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்வது உலக அரசியலுக்கு ரொம்பவே புதிது. அதிலும்
தனக்கு தேவையானது கண்ணில் தட்டுப்பட்டால் தட்டிப்பறிக்கும் அமெரிக்கா நேசக்கரம் நீட்டுவதை
என்னவென்று சொல்வது?
உலகை ஆளும் 17 மூலகங்கள்
சரி அவ்வளவு பெரிய அதிசயத்தை இந்த அரிய பூகோள மூலகங்களால் செய்ய முடியுமா என்று பார்த்தால்... முடியும் என்று சொல்கின்றது நவீன இலத்திரனியல் யுகம். அப்படிப்பட்ட அரிய பூகோள மூலகங்கள் என்ன? நான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல 17 மூலகங்கள் இருக்கின்றன.
செரியம்(Cerium) - Ce,
டிஸ்ப்ரோசியம்(Dysprosium) -Dy,
எர்பியம்(Erbium) - Er,
யூரோபியம்(Europium) -Eu,
காடோலினியம்(Gadolinium) - Gd,
ஹோல்மியம்(Holmium) - Ho,
லாந்தனம்(Lanthanum) - La,
லுடீடியம்(Lutetium) - Lu,
நியோடைமியம்(Neodymium) - Nd,
பிரசோடைமியம்(Praseodymium) - Pr,
ப்ரோமித்தியம்(Promethium) - Pm,
சமாரியம்(Samarium) - Sm,
ஸ்காண்டியம்(Scandium) - Sc,
டெர்பியம்(Terbium) - Tb,
துலியம்(Thulium) - Tm,
யெட்டர்பியம்(Ytterbium) - Yb மற்றும் யட்ரியம்(Yttrium) - Y
இவைதான் அந்த 17 அரிய பூகோள மூலகங்கள்(Rare Earth Elements).
இவற்றின் எதிர்காலத்தை கணிக்க உதாரணமாக இதை பாருங்கள், இதிலுள்ள 'நியோடைமியம்' தான் மின்சார வாகனங்களின் இயந்திரமானாலும் சரி; காற்றாலைகளின் விசிறியானாலும் சரி அதில் பயன்படுத்தப்படும் காந்தங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல 'செரியம்' இனை வைத்துதான் நாம் பயன்படுத்தும் கையடக்கதொலைபேசிகளின் திரையினை(Display) செப்பனிடப்படுகின்றது(Polish) அதுமட்டுமன்றி 'யூரோப்பியம்' என்பது LED வகை தொலைக்காட்சிகளின் திரையின்(LED display) உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அரிய மூலகம். அந்தவகையில் அரிய பூகோள மூலகங்கள் இல்லையென்றால் உலக மக்களினால் இது எதையும் ஒரு சதவீதம் கூட பயன்படுத்தமுடியாது. அப்படியிருக்கின்ற சூழலில் கண்டிப்பாக ஆயுத மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ரேடாராக(Rader) இருக்கட்டும்; போர் விமானங்களாக(Fighter Jet) இருக்கட்டும்; கனரக ஆயுத ஊர்திகளாக(Tank) இருக்கட்டும்; ஏவுகணை அமைப்புகளாக(Missile System) இருக்கட்டும் இவை அனைத்துக்கும் துல்லியம் என்பது ரொம்பவே அவசியம். இந்த துல்லியத்துக்கு இந்த அரிய மூலகங்கள் மிகமிக அவசியம்.
இந்த தேவைகள் எல்லாம் சேர்ந்துதான் இங்கு அரிய மூலகங்களின் முக்கியத்துவத்தை
அதிகரிக்கின்றது. இப்படிப்பட்ட தேவைகளின் பின்னணியில் தான் கட்டுரையின் ஆரம்பத்தில்
குறிப்பிட்டதுபோல சீனாவின் கை ஓங்குகின்றது. சீனா என்கின்ற ஒரு நாட்டில் மட்டும் சுமார்
44 மில்லியன் தொன்(Ton) அரிய பூகோள மூலகங்கள் கணக்கில் இருக்கின்றது. அடுத்தடுத்த கட்டங்களில்
பிரேசில்(22 மில்லியன் தொன்), வியட்நாம் (21 மில்லியன் தொன்), ரஷ்யா (21 மில்லியன்
தொன்) என்ற வரிசையில் உலக வல்லரசான அமெரிக்காவினால் ஏழாவது இடத்தில் தான் இருக்க
முடிந்துள்ளது.
அமெரிக்காவும் ரஷ்யாவும்
இங்கு அமெரிக்காவிடம் வெறும் 18 மில்லியன் தொன் அரிய மூலகங்கள் தான் இருக்கின்றது.
ஆனால் ரஷ்யாவிடம் 21 மில்லியன் தொன் இருக்கின்றது. ரஷ்யாவிடம் அவ்வளவுதானா என்று கேட்கும்பட்சத்தில்,
ரஷ்யாவின் பரந்துவிரிந்த எல்லைக்குள் அதிகமா இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் கொஞ்சக்காலத்திற்கு
முன்புவரைக்கும் ரஷ்யா அதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. இப்போது கொஞ்சம்
கொஞ்சமாக அதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்த ரஷ்யா, பல புதிய இடங்களை கண்டறிய வாய்ப்புகளும்
இருக்கின்றன.
ஆனால் இந்த விடயத்தில் சீனா ரஷ்யாவிற்கே முன்னோடிதான். ஏனென்றால் சீனா இந்த அரிய மூலகங்களுக்காக நிறைய திட்டங்களை முன்னகர்த்தினார்கள். கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து அவை எங்கு இருக்கின்றது கண்டுபிடித்து அகழ்ந்து எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அளவுக்கு இன்னொரு நாடு ஈடுபட்டதா என்றால் இதுவரையிலும் இல்லை. இன்றுவரை பிரேசில் உலக அரசியலில் பேசப்பட காரணம் அங்கு இருக்கக்கூடிய இயற்கை வளங்களில் மிக முக்கியமாக இந்த அரிய மூலகங்கள் இருப்பதுதான். இத்தனை நாடுகளில் இவை இருந்தும் சீனா மட்டுமே 70% உற்பத்தி செய்வதற்கும், 90% பிரித்தெடுப்பதற்கான தொழினுட்பத்தை சீனா மாத்திரம் வைத்திருப்பதற்கும் காரணம் அவற்றின் உற்பத்தியின்போது உள்ள சிக்கலான முறைகள். நிறைய இரசாயனங்களை பயன்படுத்தவேண்டும்; பிரித்தெடுக்க அதிகளவு தண்ணீர் செலவழிக்கவேண்டும்; அதிக மனிதவலு தேவைப்படும் அதுமட்டுமன்றி நச்சுத்தன்மைமிக்க கழிவுகள் வெளிவரும். இந்த தேவைகளுக்கெல்லாம் பச்சைக்கொடி காட்டக்கூடிய ஒரே நாடு சீனா. அதனால் சீனாவினால் செய்ய முடிகின்றது. ஆக ரஷ்யா அரிய மூலகங்களை பிரித்தெடுப்பார்களா என்றால் அதிக வாய்ப்பு இல்லை. ஏன் ரஷ்யா கூட அவர்களின் கனிமவளத்தை கப்பல் வழியா சீனாவுக்கு அனுப்பி அங்கிருந்து பிரித்தெடுப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்லது வியட்னாம், எஸ்தோனியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவதன் மூலம் அரிய மூலகங்கள் கொண்ட கனிம தாதுக்களை அனுப்பி அங்கிருந்து அரிய மூலகங்களை பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் வெள்ளை மாளிகை கருத்துமோதலுக்கு பிறகு ரஷ்யா நேரடியாக நாமளே உற்பத்திசெய்யலாம். "இதில் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்க தயாராக இருக்கின்றோம்." என்று சொல்கின்றார்.
2024 ஆம் ஆண்டின் தரவுகளை எடுத்து பார்த்தால் வெறும் 2,500 தொன் அரிய மூலகங்களை மட்டும்தான் எடுத்திருக்கின்றது ரஷ்யா. அதேநேரம் சீனா 240,000 தொன் அரிய மூலகங்களை எடுத்திருக்காங்க என்பது குறிப்பிடத்தக்கது. 2,500 ஐயும் 240,000 ஐயும் பார்த்தால் மலைக்கும் மடுவிற்குமான ஒப்பீடாக உள்ளதை பார்க்கலாம். இங்குதான் ரஷ்யாவின் சாணக்கியதனம் தெரிகின்றது. அதேசமயம் உக்ரைனுடைய 20% நிலப்பரப்பையும் இப்போது ரஷ்யா பிடித்து வைத்திருக்கின்றது. இந்தசமயம் ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை என்று சொல்லும்போது அமெரிக்கா சொன்ன முதல் நிபந்தனை 'ரஷ்யா எடுத்த நிலப்பரப்பை ரஷ்யாவிடம் தான் இருக்கும் திரும்ப அதை உக்ரைன் கேட்கமுடியாது' என்பதுதான். அப்படியே உக்ரைனும் திரும்பக்கேட்காமல் இருந்தால் உக்ரைனுடைய அரிய மூலகங்களின் 50% ரஷ்யாவிடம் சென்றுவிட்டதாகவே கணக்கு. ஏற்கனவே ரஷ்யாவுக்கு அரிய மூலகங்களுக்கான சுரங்கங்களும், நிலங்களும் இருக்கின்றது. அதுகூடவே உக்ரைனுடைய கனிமவளம் நிறைந்த நிலப்பகுதியிலிருந்தும் அரிய மூலகங்கள் கிடைக்கின்ற வாய்ப்புகள் உருவாகும்.
சரி உக்ரைனை விட்டுவிட்டு ரஷ்யாவுடன் இணைந்தால் அமெரிக்காவுக்கு என்ன இலாபம் என்று பார்த்தால் மூன்று விதங்களில் உண்டு. ஒன்று சீனாவில் தங்கியிருக்க தேவையில்லை. ஒருவேளை ரஷ்யாவுடன் நல்ல ஒப்பந்தம் வந்துவிட்டது என்றால், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கும் உக்ரைனிலிருந்து அமெரிக்காவிற்கும் என இரண்டு விதமாக இந்த அரிய மூலகங்களை அமெரிக்காவினால் எடுத்துக்கொள்ளமுடியும். அடுத்ததாக சமாதான நீதியாளன் என்னும் நிலை. நீண்டகாலமாக இந்த உக்ரைன் - ரஷ்யா போர் பற்றி உலக நாடுகளே பேசிட்டு இருக்கும்போது டொனால்ட் டிரம்ப் அவர்கள் 'வந்தாரு முடிச்சாரு' என்று சொல்லும்வகையில் ஒரு நல்ல பெயர் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றது. மூன்றாவது ரஷ்யாவினுடைய நேசக்கரம். இவ்வளவு நாள் எதிரியாக இருந்தவர்கள் புதிதாக நண்பர்களாக மாறலாம் என்னும் ரஷ்யாவின் நேசக்கரம் அமெரிக்காவிற்கு ஒரு நல்ல விடயமாக பார்க்கப்படுகின்றது. இதனால் அரிய மூலகங்களுக்கான பிரித்தெடுப்பு, உற்பத்தி தொழினுட்பங்களை இரண்டு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இதனால் உலக அரசியற்போக்கில் மாற்றம் வருமா என்று பார்த்தால் ரஷ்யாவினுடைய கை ஓங்க ஆரம்பிக்கும். 'அரிய மூலகங்கள் என்னிடம் அதிகம் உள்ளது. நாம் சேர்ந்து செயற்படலாம். ஆனால் அதற்கு முதல் சில இணக்கப்பாடுகளுக்கு நாம் வரவேண்டும்.' என்று அமெரிக்காவிடம் ரஷ்யா பேரம்பேச வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அமெரிக்காவிற்கு இது Win Win நிலை தான் என்பதை பார்த்துவிட்டோம். நிறைவாக சீனாவினுடைய நிலையை பார்த்தால், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றிணைந்து விட்டால் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் சீனாவுக்கு இது ஒரு பெரிய சிக்கல். இதற்கெல்லாம் சவால்களும் இருக்கின்றன. சூழலியல் மாறுபாடுகளாக இருக்கலாம் அல்லது அங்கு வசிக்கும் மக்களுடைய எதிர்ப்பாக இருக்கலாம் அதுமட்டுமன்றி சீனாவிடம் பிரித்தெடுப்பதற்கான அனைத்துவிதமான தொழினுட்பங்களும் இருக்கின்றது.
ஆனால் ரஷ்யாவிடம் அந்த அளவுக்கு உட்கட்டுமான வசதிகள் இருக்கின்றதா என்று பார்த்தால் இன்றுவரை கிடையாது. இந்த அரிய மூலகங்களுக்காக சுரங்க அமைப்பினை உருவாக்க சுமாராக 10 லிருந்து 12 வருடங்கள் எடுக்குமென்றால் நிலை கேள்விக்குரியது. இதையெல்லாம் தாண்டி முதலீட்டுக்கான ஆபத்து உள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஏகப்பட்ட பொருளாதார தடைகள் உள்ளன. ரஷ்யாவில் ஒரு நிறுவனம் முதலீடு செய்வதென்பது கொஞ்சம் ஆபத்துடன் தான் செய்யவேண்டியதாக இருக்கும். ரஷ்யா அமெரிக்கா ஒப்பந்தம் போட்டாலும் கூட அது எத்தனை ஆண்டுகளுக்கு இதேபோல இருக்கும் என்பது பெரும் கேள்விதான்.
இது எல்லாவற்றையும் விட 2029 வரைதான் இது நடக்கும். ஏனென்றால் டொனால்ட் டிரம்ப் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் இந்த மாதிரியான மாற்றத்தை நம்மளால் பார்க்க முடியும். இன்னும் நான்கு வருடங்களில் அரிய மூலகங்களை எடுத்து, அதை விற்பனை செய்து, அதனால் வளர்வது என்பது ரஷ்யாவின் தொழினுட்ப அறிவுக்கு வைக்கப்படும் மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் உலக அரசியலின் போக்கு இனி அந்த 17 மூலகங்களை சுற்றித்தான் ஓடப்போகின்றது.
[Reference]
U.S. threatened to cut Ukraine’s Starlink access over minerals: sources
Ukraine discloses details of draft minerals deal with the U.S.
China hits back at Trump tariffs with 10-15% duty on select US goods
China proposes new rules to tighten control over rare earth sector
Zelensky Says $500 Billion Mineral Deal Is Off the Table but Ukraine Is Open to Negotiations
Russia says it’s open to economic cooperation with US on rare earth minerals and energy
Rare Earths Reserves: Top 8 Countries
Trump eyes Russia’s rare earth reserves after ‘serious’ strategic talks with Putin

.jpg)
.jpg)
.jpg)

