அரசியற்கைதிகள் என யாரும் இல்லை!!! ஜே.வி.பியின் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
tamil news: நாடளாவியரீதியில் எந்த சிறைகளிலும் அரசியற்கைதிகள் என யாரும் தடுத்துவைக்கப்படவில்லை என ஜே.வி.பி அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும், சட்டத்தரணியுமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்கள் குறித்து சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார்.
அதாவது,
நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்து வடகிழக்கு பிராந்திய பொதுமக்களிடத்தில் கையெழுத்துக்களைச் சேகரித்து அநுரகுமார திஸாநாயக்கவிடமும், சட்ட மாஅதிபரிடமும் கையளிக்கும் முகமாக 'போராளிகள் நலன்புரிச்சங்கத்தினர்' நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கையெழுத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டநிலையில்,
தமிழ் அரசியற்கைதிகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டிலுள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியற்கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் உள்ளார்கள்.இவர்களில் சிலருக்கு தண்டனையளிக்கப்பட்டுள்ளது, சிலரது வழக்குகள் நீண்டகாலமாகவும், குறுகிய காலமாகவும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில், நாடளாவியரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டவர்களின் பட்டியலை விரைவாக தயாரிக்கும் நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அது தயாரிக்கப்பட்டபின் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப்பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகின்றேன்.அரசாங்கத்தைப் பொருத்தமட்டில்,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நியாயமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது.அதேநேரம், குறித்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்கள் குறித்து எம்மால் எந்தவிதமான நடவடிக்கைகளையும் செய்யமுடியாது.ஏனென்றால் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது."
என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்