அரசுக்கெதிராக இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்குவோம்! விவசாய அமைப்பு எச்சரிக்கை
tamil news:
"நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக நிர்ணயிக்காவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகளுடன் வீதிக்கு இறங்குவோம்."
இவ்வாறு தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து பாகொட தெரிவித்தார்.
நேற்றையதினம்(02.02.2025) மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்,
"விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும், நெல்லுக்கான உத்தரவாதவிலை நிர்ணயிக்கப்படவேண்டும்.
அரிசி மாபியாக்கள் முடிவுக்கு வரவேண்டும் என்று விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை கடந்த ஆண்டு தோளில் சுமந்து கொண்டு திரிந்த விவசாயத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று விவசாயிகளுக்கு எதிராக செயற்படுகிறார்.
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்குவந்த இந்த அரசாங்கம் இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுவதையிட்டு வெட்கமடைகின்றோம்.
விவசாயிகளுக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உரநிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.
முன்னாள் சனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தின் அழிவு விவசாயத்துறையில் இருந்தே ஆரம்பமானது.
நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் வெகுவிரைவில் தீர்மானிக்கவேண்டும்.
இல்லையேல் அரசாங்கத்துக்கெதிராக பல இலட்ச விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம்."
என்றார்.
மேலும் நெல்லுக்கான உத்தரவாதவிலை இந்த வாரம் அறிவிக்கப்படும் என வர்த்தக வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.