வளைகுடா நாட்டில் கொடுமைகளை அனுபவித்த பெண் வீடு திரும்பினர்!
tamil news: 2022ம் ஆண்டு பணிப்பெண்ணாக ஓமான் நாட்டிற்குச்சென்ற பெண்ணொருவர் கடந்த ஒரு வருடமாக எந்தவித தொடர்புகளும் இல்லாமலிந்த நிலையில் தற்சமயம் தாய்நாடு திரும்பினார்.
அதாவது,
மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் ஓமான் நாட்டிற்குச்சென்றருப்பதாகவும், தொடர்பற்றிருக்கும் அவரை உரிய முறையில் மீட்டுத் தருமாறும் அவரது குடும்பத்தினர் கடந்தமாதம் 12ம் திகதியன்று ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஓமான் சென்ற குறித்த பெண் கடந்த 11ம் திகதியன்று திடீரென தன்னுடைய வீட்டிற்கு வந்துசேர்ந்துள்ளதாக தெரிவித்த குறித்த பெண்ணின் சகோதரிகள்,
ஊடகங்கள் வாயிலாக அறிவித்து 1 மாதத்திற்குள்ளேயே எமது அக்காவை மீட்டுத்தருவதற்கு பேருதவியாக இருந்த ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து குடும்பத்தினர் நேற்று(16.01.2025) ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,
"வெளிநாடு சென்று 2 வருடங்கள் ஆகின்றன. அதில் 1 வருடகாலத்திற்கான சம்பளத்தை நான் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் எமது குடும்பத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்.
அடுத்த வருடத்திற்குரிய சம்பளம் எதையும் அவர்கள் எமது வீட்டிற்கு அனுப்பவில்லை.
என்னை அடித்து துன்புறுத்தினார்கள், மொட்டைமாடி வெயிலில் முழங்காலில் நிற்குமாறு கட்டாயப்படுத்தினார்கள்,
கரண்டியை சூடாக்கி காலில் சூடு வைத்தார்கள் இப்படி பல கொடுமைகளை நான் அங்கு அனுபவித்தேன்.
நான் கடமை புரிந்த மிகுதியாகவுள்ள 1 வருடத்திற்குரிய சம்பளத்தை எனக்கு பெற்றுத்தரவேண்டும்.
என்னை மீட்டெடுக்க உதவிய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்"
இவ்வாறு வீடுவந்து சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் தெரிவித்துள்ளார்.
