பூதன்வயல் பாடசாலை காணி: தீர்வு கிடைக்கும் வரை மக்கள் போராட்டம்!
tamil news: முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தின் தண்ணிமுறிப்பு பாடசாலை இயங்கிய காணியை தனிநபர் ஒருவர் அடாத்தாக பிடித்துவைத்திருக்கும் நிலையில் மீட்டுத்தரக்கோரி இன்றையதினம்(27.01.2025) கவனயீர்ப்பு போராட்டத்தை மக்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
குறித்த போராட்டம் பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது,
யுத்தகாலத்துக்கு முன்னர் நீண்டகாலமாக பாடசாலை இயங்கிவந்த காணியை யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேற்றமடைந்தபோது தனியார் ஒருவர் இந்த பாடசாலைக்காணியினை சுபீகரித்து பாடசாலை அடையாளங்களை அழித்து வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
அன்றைய அரசியல் சூழல் காரணமாக போராடி குறித்த காணியை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து உரியமுறைப்படி பிரதேசசெயலக அதிகாரிகளை அணுகி அவர்கள் ஊடாகவும் குறித்த தனிநபரை வெளியேற்ற முடியாதநிலையில் இன்றையதினம்(27.01.2025) 'பூதன்வயல் தண்ணிமுறிப்பு அ.த.க பாடசாலை' அமைந்திருந்த காணிக்கு அருகாமையில் பாடசாலைக்காணிக்கான தீர்வு கிடைக்கும்வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் பாடசாலை சமூகத்தினர், ஊர்மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை பூதன்வயல் பொதுநோக்கு மண்டபத்தில் மரங்களுக்கு கீழ் 53 மாணவர்களுடன் வசதிகளற்றநிலையில் இயங்கிவருகின்றது.
மேலும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கப்பெறாதநிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களை இடைநிறுத்தி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த முள்ளியவளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


