நாடளாவியரீதியில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!
tamil news: கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைவிட்டு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேசமயம் கிழக்கு மாகாணத்திலும், மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களின்பல இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும்,
வடகிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும்,
அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் சப்ரகமுவ, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலைநேரம் பனிமூட்டமான காலநிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களை மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வழிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

