உலகக்கிண்ண சதுரங்க போட்டிக்கு தெரிவான தமிழ்ச்சிறுமி – மக்கள் ஒத்துழைப்பை கேட்கும் பெற்றோர்!
tamil news:
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த 8 வயதுக்குட்பட்ட சிறுமியான கஜிசனா தர்சன் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண சதுரங்க போட்டியில் போட்டியிடத் தெரிவாகியுள்ளார்.
இது தொடர்பாக அவரது தந்தை தெரிவித்ததாவது,
"எனது மகள் சிறுவயதிலேயே உலகத்தரத்தில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளமை பெருமிதத்தை ஏற்படுத்துகின்றது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இலங்கை மற்றும் தமிழர் சமூகத்தின் பெருமையை உயர்த்தவேண்டும் என்ற கனவுடன் உழைக்கின்றோம்."
என தெரிவித்தார்.
அவரது மகள் வரவிருக்கும் ஐந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர் சதுரங்க போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தாலும்,
தேவையான நிதிவசதிகள் இல்லாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் கடந்த ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான பிரதிநிதியாகத் தெரிவாகிய இவர்,
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப்போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த டிசம்பரில் உலகளாவிய ரப்பிட் செஸ் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தில் புலமைச் சான்று பெற்றுள்ளார்.
இந்த சிறுமி தொடர்ச்சியாக சர்வதேச அளவில் போட்டியிட வேண்டிய நிலையில், நிதியுதவி பெரும் தேவை என்பதை பெற்றோர் வலியுறுத்துகிறார்கள். சமூகமும், ஸ்பான்சர்களும் இதனை கவனித்தால், அவர் இன்னும் பல வெற்றிகளை நாட்டிற்காக கொண்டுவர முடியும் என நம்பப்படுகிறது.

