தமிழர் விடுதலை வேட்கை: தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் உணர்ச்சிப்பிழம்பான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!!
tamil news:
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையாகிய முள்ளிவாய்க்கால் நினைவுதினமான மே18 இல்,
உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நிகழ்வுகள், தமிழர் வாழும் பல இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றன.
முள்ளிவாய்க்கால் முற்றத்தை நனைத்த உறவுகளின் இரத்தக்கண்ணீர்
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நேற்றையதினம்(18.05.2025) காலை முதல் நிகழ்வுகள் தொடங்கின.
நிகழ்வின் ஆரம்பமாக முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அதேபோல் காலை 10.31 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதையடுத்து, பல இடங்களில் சுடர்களும் ஏற்றி வைக்கப்பட்டன.
உயிரிழந்த உறவுகளை நினைத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்காலை தேடிவந்த சிறை
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் சிறைக் கூண்டொன்றுடன் வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் பவனியும் முன்னெடுக்கப்பட்டது.
இது இனவழிப்பு நினைவாக மட்டுமன்றி தற்போதும் நீடிக்கும் சிறை வலியையும் வெளிக்கொணர்ந்தது.
13 கோடி தமிழ் மக்களுக்கு ஏன் இன்னும் சுதந்திரம் இல்லை? - சீமான் தலைமையில் பாரிய நினைவேந்தல் கூட்டம்
தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில்
'தமிழினப் பேரெழுச்சி'
என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சீமான் நிகழ்வில் பேசும் போது,
"13 கோடி தமிழ் மக்களுக்கு ஏன் இன்னும் சுதந்திரம் இல்லை?"
என சிக்கலான, தமிழர் தலைமுறையை சிந்திக்கவைக்கும் அரசியல் கேள்வியை எழுப்பினார்.
முரசுமோட்டையில் இரத்ததானம்
முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு முரசுமோட்டை பகுதியில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இளைஞர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடைபெற்றது.
திருகோணமலையில் நினைவு கஞ்சி வழங்கல்
திருகோணமலை தம்பலகாமம் மற்றும் பொற்கேணி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர்.
வாகரை கடற்கரையில் இன அழிப்பு நினைவேந்தல்
மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது.
தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வவுனியாவில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை
வவுனியாவில் அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை மற்றும் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் பொதுமக்கள் கலந்துகொண்டு இறந்த உறவுகளுக்கு வழிபாடு செலுத்தினர்.
யாழ். பல்கலைக்கழக நினைவு நிகழ்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீபச்சுடரும் மலரஞ்சலியும் செலுத்தினர்.
மட்டக்களப்பில் இன அழிப்பு வாரத்தின் நிறைவு நிகழ்வு
மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன அழிப்பு வாரத்தின் நிறைவு நிகழ்வு மிகுந்த உணர்வுடன் நடைபெற்றது.
சிங்களத் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் குழப்பம் விளைவிக்கப்பட்ட நினைவேந்தல்
வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது 'சிங்கள ராவய' அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவற்துறையினரின் கடும் கண்காணிப்புடன் நிகழ்வு இடம்பெற்றநிலையில் இந்தகுழப்பம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்து கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அஞ்சலி
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தீபச்சுடர் ஏற்றி இனவழிப்பில் உயிர் கொடுத்தவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர்.
பொதுவான பகுதிகளில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை தவிர வடகிழக்கு பிராந்தியத்தின் கிராமங்கள், நகரங்கள் தோறும் நினைவேந்தல்கள் சிறப்பாக இடம்பெற்றன.