நினைவுகூர்தல் குறித்து மனிதவுரிமைகள் ஆணைக்குழு அறிக்கை! என்ன கூறுகிறது?
tamil news:
வடகிழக்கு பிராந்தியத்தில் நடைபெறும் அமைதியான நினைவுகூரல் நிகழ்வுகளைத் தொடர்ந்து,
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் பொதுமக்களை கைதுசெய்வதற்கான சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.
மனிதவுரிமை ஆணைக்குழு தற்போது செயற்பாட்டலுள்ள காவற்துறை மாஅதிபருக்கு எழுதிய கடிதத்தில்,
சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்(ICCPR) பிரிவு 3 பாதுகாப்பளிக்கவேண்டிய மனித உரிமைகளை மீறக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
போர் காலத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் அமைதியான நிகழ்வுகள் சட்டவிரோதமானதாகப் பார்க்கப்படுவது தவறான நடைமுறையாகும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டிற்கான உரிமைக்கு எதிரானது.
மேலும் இந்நிகழ்வுகள் பொது இழப்பீடு (Collective Reparations) எனப் பார்க்கப்பட்டு,
இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டத்தின் (சட்ட எண் 34/2018) கீழ் அங்கீகரிக்கப்பட்டவை.
இதனை அடிப்படையாகக் கொண்டு, ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகள்:
1. அனைத்து காவல் நிலையங்களுக்கும் தமிழில், சிங்களத்தில் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
2. அமைதியான நினைவுகூரல்களை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் குறித்து விளக்கம் வழங்கப்பட வேண்டும்.
3. வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டாத நிகழ்வுகளைத் தடுக்க நீதிமன்றத் தடை உத்தரவை எதிர்பார்த்து செயல்படக் கூடாது என்பதையும் காவல் அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கை, நினைவுகூரல் உரிமையை மதித்து, எதிர்காலத்தில் காவற்துறை அதிகாரிகள் நியாயமான முறையில் செயல்பட உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.