மின்சார கட்டண உயர்வு: பொதுமக்களின் கருத்துக்களை நாளை முதல் கேட்கப்படும்!
tamil news:
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதிக்கான மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை பெறும் செயற்பாடு நாளைமுதல்(23.05.2025) முதல் ஆரம்பமாகவுள்ளது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தத்திற்கு மாற்றுப் பரிந்துரை அளிக்கும் நோக்கில்,
மே 23 முதல் ஜூன் 3ம் திகதி வரை,
நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் புதிய திருத்தம் கட்டண உயர்வை உள்ளடக்கியதாக இருந்தாலும்,
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட கட்டணத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே இருக்கும் என இலங்கை மின்சார சபை கூறியுள்ளது.
இந்த புதிய கட்டண மாற்றம் தொடர்பான முன்மொழிவை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததையடுத்து, அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான விளக்கத்தை வழங்கிய மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக்க விமலரத்ன,
"மின்சார கட்டணத்தில் சில உயர் நிலைகள் காணப்படலாம்.
இருப்பினும் இவை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த கட்டணங்களை விட குறைவாகவே அமையும்."
என தெரிவித்துள்ளார்.
மேலும் 2014 முதல் 2022 வரை மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கான செலவுகள் அதிகரித்த போதிலும்,
அந்த காலப்பகுதியில் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
அந்த நேரத்தில் எரிபொருள், நிலக்கரி, உதிரிப் பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

