மலைநாட்டில் சீரற்ற வானிலை – போக்குவரத்து, மின்சாரம் தடைப்பட்டது!!!
tamil news:
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் தோட்டம் பகுதியில் இன்றையதினம்(27.05.2025) அதிகாலை பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் அந்தப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஹட்டன் காவற்துறை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயல்பட்டனர்.
இதன்பின்னர் குறித்த வீதியில் போக்குவரத்து ஒரே திசையில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டது.
இதேவேளை ஹட்டன் – பொகவந்தலாவை இணைக்கும் பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில் பெரிய மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.
இதனால் அப்பகுதியிலுள்ள மின்சார மற்றும் தொலைபேசி இணைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வனராஜா தோட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒன்று வீழ்ந்த மாமரம் மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்களும் கிளைகளும் மின்சார பாதைகளில் விழுந்துள்ளன. இதனால் ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோர்டன் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தை விரைவில் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ஹட்டன் மின்சார சேவை மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


